பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
02:04
சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ரத்னகிரீஸ்வரர் கோவில், பக்த மண்டலி சார்பில், பங்குனி உத்திரம் - சீதா கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சி, நாளை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனித நாள், பங்குனி உத்திரம் என்றழைக்கப்படுகிறது. வளமான பலன்களைத் தரும் விரதங்களில், பங்குனி உத்திரமும் ஒன்று. இந்த விரதத்தை, கல்யாண விரதம் என்றும் கூறுவர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு அதிக மகிமை உண்டு. பார்வதி - பரமேஸ்வரன், தெய்வானை - முருகன், ஆண்டாள் - ரங்கமன்னார், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என, பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள், இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ராமாயணத்தில் வரும், தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும், பங்குனி உத்திரத்தில் தான், தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். இந்தத் திருநாளில், லோபாமுத்திரை, அகத்திய முனிவரையும்; பூரணாபுஷ்கலா, அய்யப்பனையும்; ரதி, மன்மதனையும் திருமணம் செய்து கொண்டனர் என, கந்த புராணம் கூறுகிறது.
வள்ளி, அய்யப்பன், அர்ஜுனன் போன்ற பல தெய்வ அவதாரங்கள் தோன்றியதும், இந்த நாளில் தான். எனவே, பங்குனி உத்திரமானது மிக புண்ணிய தினமாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி பல விதத்திலும் சிறப்பு வாய்ந்த தினமான, நாளை, ரத்னகிரீஸ்வரர் கோவிலில் உள்ள, அராளகேசி அம்பாள், ரத்னகிரீஸ்வரர், ரத்ன சுப்ரமணியர் மற்றும் கோதண்ட ராமர் சன்னிதியில், விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்றைய தினம், கோவிலில், கும்பகோணம் அனந்த நாராயண பாகவதர் குழுவினரால், சீதா கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், உஞ்சவ்ருத்தி; 8:00 மணிக்கு, திவ்யநாமம்; 9:00 மணிக்கு, சீதா கல்யாண மஹோத்ஸவம் துவங்குகிறது. மதியம், 12:00 மணிக்கு, தீபாராதனை; 12:30 மணிக்கு, பிரசாத வினியோகம் நடைபெறும். இது குறித்து, பக்த மண்டலி நிர்வாகிகள் கூறியதாவது: தெய்வத் திருமணங்கள் பல நடந்த இப்புண்ணிய தினத்தில், திருமணம் ஆகாதவர்களின் ஜாதகத்தை கொண்டு வந்து, சீதா பிராட்டி - ராமபிரானின் பாதங்களில் வைத்து எடுத்து சென்றால், மிக விரைவில் திருமணமாவதுடன், வாழ்க்கையில் அனைத்து நலங்களையும் பெறுவர். திருமணம் ஆனவர்களும், இந்த உத்சவத்தில் கலந்து கொண்டால், வாழ்க்கையில் அனைத்து குறைகளும் நீங்கி, மன சாந்தி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய அனைத்தும் கிட்டும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.