திருப்புத்தூர்: திருப்புத்தூர் தம்பிபட்டி புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட பூர்ண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் திருக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பின் புரவி எடுப்பு விழா நடைபெறுகிறது. இந்த அய்யனார் கோயிலில் கடந்த 2015 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு 35 ஆண்டுகளுக்கு முன் புரவி எடுப்பு நடந்துள்ளது. அதன் பின்னர் தற்போது முதன் முறையாக இக்கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது. புரவி எடுப்பை முன்னிட்டு திருப்புத்தூர் மேலத்திருத்தளிநாதர் கோயில் அருகே ஸ்ரீராமர் மடத்தில் சித்திரை முதல் வெள்ளியான பிப்.,14ல் பிடிமண் கொடுத்தல் நடைபெற உள்ளது. வேளார்கள் பிடிமண் வாங்கிய பின் திருவிழாக்காப்புக் கட்டப்படும். தொடர்ந்து மூன்று கிராமங்களுக்கான புரவிகள் உள்ளிட்ட 5 புரவிகள் தயாராகும். பின்னர் இரண்டாவது வெள்ளியான ஏப்.21ல் தம்பிபட்டியிலிருந்து சாமி அழைப்பு, கோயில் முன்பாக சிவகங்கை வெட்டுதல், தம்பிபட்டிக் கிராமத்தினரின் குட்டிச் சிறப்பும் நடைபெறும். மூன்றாவது வெள்ளியான ஏப்.28 ல் மாலை 4.30 மணிக்கு புதுப்பட்டி புரவித் திடலிலிருந்து கிராமத்தார்கள் ஒன்று கூடி புரவி எடுத்து சீதளி கீழ்கரை புரவி திடலுக்கு வருவர். மறுநாள் மாலை புரவித் திடலிலிருந்து கிராமத்தினர் புரவிகளை எடுத்துக் கொண்டு திருத்தளிநாதர் கோயில், மேலரதவீதி, காந்திசிலை, பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைவர்.ஏற்பாட்டினை திருப்புத்தூர், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினர் செய்கின்றனர்.