பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
02:04
காளிப்பட்டி: சேலம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, இன்று மாலை ஆற்றில் காவடிகளை புனித நீர் ஊற்றி சுத்தம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பங்குனி உத்திரத்தன்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவர் கந்தசாமிக்கு புனித தீர்த்தங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படும். விழாவையொட்டி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, காவடிகளை சுமந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர். இரவு, 8:00 மணிக்கு சப்பரத்தில், கந்தசாமி எழுந்தருளி கோவில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்கின்றனர். இதேபோல், பூலாவரியில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படும். மாலை, 5:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
* வீராணம் பிரதான சாலை, டி.பெருமாபாளையம், கோம்பேரிக்காடு, சிவசக்தி முருகன் கோவிலுக்கு, இன்று காலை, 6:30 மணியளவில், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தகுடம் மற்றும் காவடி எடுத்து, நடைபயணமாக வருகின்றனர். இரவு, 7:00 மணிக்கு பஜனை நடக்கும். நாளை மதியம், 12:00 மணிக்கு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
* சேலம், சுக்கம்பட்டியில் உள்ள உதயேஸ்வரர் கோவிலில், 11ம் ஆண்டு திருவிழா, வரும், 12ல் நடக்கிறது. அன்று காலை, 8:00 முதல், மதியம், 12:00 மணிக்குள், யாக பூஜை, அபிஷேகம்; மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.
* பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மேட்டுடையாம்பாளையம் விநாயக முருகன் கோவிலில், ஆறாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு காவடி நிறைகட்டுதல், பால்குட ஊர்வலம்; 10:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை; மாலை, 5:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா; இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு கச்சேரி நடக்கிறது.
* மகுடஞ்சாவடி, சுப்ரமணியர் கோவிலில், நாளை காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்; 11:00 மணிக்கு வெள்ளிக் கவசம், புஷ்ப அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
* இடைப்பாடி, சித்தூர் படவெட்டியம்மன் கோவில், பங்குனி திருவிழா, கடந்த, 5ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை, தேர் திருவிழா நடந்தது. கோவிலில் இருந்து, சித்தூர் அம்மன் கோவில் வரை, பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.