பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
12:04
பழநி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் தேரோட்டம் நடந்தது. பழநி மலைக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பால்குடங்கள், தீர்த்தக்காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் செவ்வந்தி, செண்டுமல்லிபூக்கள், பல வண்ண ரோஜா, தாமரை, இளநீர் உள்ளிட்டவைகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில், திருஆவினன்குடி கோயிலிலும் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.நேற்று காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் உலா வந்தார். காலை 11 மணிக்கு வடக்கு கிரிவீதியில் சுவாமி தேரேற்றம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மாலை 6.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இன்று இரவு 10 மணிக்கு மேல் தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி திருவுலா வந்து அருள்பாலிக்கிறார்.
பக்தர்கள் காத்திருப்பு : இதற்கிடையே பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் நெரிசலை கட்டுப்படுத்த, தரிசனம்
முடித்த பக்தர்கள், ஓய்வு எடுக்க தடை விதிக்கப்பட்டது. 3 மணி நேரம் வரை காத்திருந்து வின்ச்-கள், ரோப் கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர்.