பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி அக்னி சட்டி ஏந்தி பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர் , சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, செங்குன்றாபுரம், இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கோயில்களில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வந்து கொண்டே இருப்பார்கள். பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இக்கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. கோயிலுக்கு முன் காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக இரவு அடுப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு முன் நாட்டுக்கோழி குழம்பு, கருவாட்டுக் குழம்பு , கொழுக்கட்டை என செய்து மண்சட்டியில் சமைத்து அம்மனுக்கு படைத்தனர். அதன்பின் ஏராளமான பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.