பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பங்குனி உத்திர விழாவில் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் வழிவிடு முருகன், குயவன்குடி சாது சுப்பையா, உச்சிப்புளி ஆடிவேல், இடையர்வலசை தி வடிவேல், மண்டபம் மறவர் தெரு பாலசுப்ரமணியசுவாமி, ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம வடிவேல் முருகன், காந்தி நகர் சண்முக சடாச்சர வடிவேல் முருகன் கோயில்களில் மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. இக்கோயில்களில் தினமும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடந்தன. உத்திர நாளான நேற்று விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தியும், மயில், பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சுவாமி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.உதவி எஸ்.பி., சர்வேஷ்ராஜ், கூடுதல் எஸ்.பி.,கள் இன்பமணி, வெள்ளைத்துரை தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.