பதிவு செய்த நாள்
07
நவ
2011
11:11
கடையநல்லூர் : நெடுவயல், அச்சன்புதூர் உத்தமியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. கடையநல்லூர் அருகேயுள்ள நெடுவயல், அச்சன்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் உத்தமியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவாடுதுறை ஆதீனம், சீர்வளசீர் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் நல்லாசியுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. இக்கோயிலில் மூலஸ்தானம், நவக்கிரம், தட்சிணாமூர்த்தி, கணபதி, சிவன், பார்வதி, வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியர், பைரவர் ஆகிய விக்கிரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி காலை 6 மணிக்கு புண்யாவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியன நடக்கிறது. மாலை 6 மணிக்கு தனலட்சுமி பூஜை, தீர்த்தசங்கிரகரணம், கங்காபூஜை, பூமிபூஜை, முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 8 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மாலை 7 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 13ம் தேதி காலை 7 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகளும், தீபாராதனையும், காலை 10.45 மணிக்கு யாகசாலைகளிலிருந்து கடம்புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து 11 மணிக்கு மேல் விமானங்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மூலஸ்தானங்கள் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சாம்பவர்வடகரை கண்ணன் வாத்தியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நெடுவயல், அச்சன்புதூர் உத்தமியம்மன் கோயில் விழாக்கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.