பதிவு செய்த நாள்
28
ஏப்
2017
12:04
திருப்பூர்: ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா, திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று துவங்கியது.திருப்பூர் திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இவ்விழாவில், நேற்று காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீ ராமானுஜருக்கு பாலாபிஷேகம்,
திருமஞ்சனம், மங்கள ஆரத்தி மற்றும் நூற்றந்தாதி பாராயணம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ராமானுஜர், வீதி உலா வந்து,
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில், "ராமானுஜரே முன்னோடி என்ற தலைப்பில், மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. பின், உபதேச ரத்தின மாலை பாராயணம், மங்கள ஆரத்தி, சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன.இவ்விழாவில், வரும், 2ம் தேதி வரை தினமும் காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ ராமானுஜருக்கு பாலாபிஷேகம், நூற்றந்தாதி பாராயணம்; மாலையில், உபதேச ரத்தின மாலை பாராயணம் நடக்கிறது.இன்று மாலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை; நாளை மாலை, 5:00 மணிக்கு "புரட்சி துறவி என்ற தலைப்பில், நாகை முகுந்தன் சொற்பொழிவு; வரும், 30ல் மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீ ராமன் மற்றும் சங்கீத கலா பீடம் மாணர்களின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. ராமானுஜர் ஜெயந்தி தினமான, மே 1ல், பாலாபிஷேகம், காலை, 10:00 மணிக்கு, "ஓம் நமோ நாராயணா மந்திரம் ஒரு கோடி பாராயணம்; மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீ ராமானுஜர் திருவீதி உலா, திருக்கூட்டத்தாரின் தாஸ சேவை நிகழ்ச்சிகள் நடக்கிறது, வரும், 2ல், காலை, 7:00க்கு, ஸ்ரீ
மணவாளமாமுனிகள் பாலாபிஷேகம், மாலையில் உபதேசரத்தின மாலை நிகழ்ச்சி நடக்கிறது.