பதிவு செய்த நாள்
28
ஏப்
2017
12:04
ஸ்ரீபெரும்புதுார் : ராமானுஜரின், ஆயிர மாவது ஆண்டு திருஅவதார விழா, ஆறு நாட்கள் கடந்த நிலையிலும், தற்போது தான் அவசர, அவசரமாக கோவிலின் முன், கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனால், விழாவிற்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் ராமானுஜர். இவரின், ஆயிரமாவது ஆண்டு திருஅவதார விழா ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்திய முழுவதும் உள்ள வைணவர்களால் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. ராமானுஜர் பிறந்த ஸ்ரீபெரும்புதுாரில் தமிழக அரசு சார்பில் வெகுவிமரிசையாக விழா நடத்த, சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், எதிர்பார்த்த படி இல்லை என, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா ஆறு நாட்கள் நிறைவுற்று, இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே விழா எஞ்சியுள்ள நிலையில், கோவிலின் முன் கட்டுமான பணிகள், 15 நாட்களுக்கும் மேலாக அவசர அவசரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளால், கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதான பக்தர்கள் கட்டுமான பணிகளுக்காக போடப்பட்டுள்ள கம்பங்களுக்கு இடையே நுழைந்து செல்ல வேண்டி யுள்ளது. ஏப்ரல் 12ல், ஆதிகேசவப் பெருமாள் உற்சவ விழா துவங்கி, ஏப்ரல் 21ல் முடிவுற்றது. இதை தொடர்ந்து, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, 22ல் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் திட்டமிட்டு முடிக்காமல், விழா நடந்து வரும் நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறுவது, பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.