பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வெள்ளை ஆடையில் ராமானுஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2017 12:04
காஞ்சிபுரம் : செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், அவரது ஆயிரமாவது ஆண்டு விழாவில், நேற்று, வெள்ளை சாத்துப்படி விழா வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் அவரது ஆயிரமாவது ஆண்டு விழா, 22ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் நாள், 108 கலசாபிஷேகம் மூலவருக்கு நடந்தது. தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. வழக்கமாக, ராமானுஜர் காவி ஆடையில் தான் இருப்பார். நேற்று, வெள்ளை ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எப்போதும் வெள்ளை உடையில் காணப்படும் ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜரை காப்பாற்ற காவி உடையில் சென்றதால் அவர் தான் ராமானுஜர் என கருதி, மன்னன் அவர் கண்ணை பறிக்க உத்தரவிட்டான். அதை நினைவு கூரும் வகையில் இந்த உற்சவம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. நேற்று காலை ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு பலவகை மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.