யோக நெறியில் நிற்கும் சாதகர்கள், பாகற்காய் பொரியலும் தூதுவளைக் கீரை மசியலும் உண்பது வழக்கம். இவை உடலில் யோக சாதனைக்குரிய மாற்றத்தை உண்டாக்குவதுடன், உடற்சூட்டைத் தணித்து மயக்கங்களை நீக்கும் என்பர். தவயோக ராஜனாகத் திகழும் திருவாரூர் அருள்மிகு தியாகேசப் பெருமானுக்கு, உச்சிக்கால பூஜை வேளையில் தூதுவளையையும், பாகற்காயையும் நிவேதிக்கும் வழக்கும் இருந்தது. வெள்ளைப் பாகாற்காயை நீளவாக்கில் வெட்டி நெய்யில் வதக்கி, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நிவேதனம் செய்வார்களாம்.
முன்னாளில் பெருந்திருவிழாவின்போது ஒருநாளாகப் பாகற்காய் மண்டபப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி இருந்ததாகக் கூறுகின்றனர். ஆடாது ஆடி பாகற்காய் பறிக்கும் தியாகேசா என்றொரு பாடல் வரியும் உண்டு!