பதிவு செய்த நாள்
03
மே
2017
12:05
அவிநாசி : அவிநாசி தாலுகா, கணியாம்பூண்டி முருகம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான அழகர் அப்பச்சிபாறை, ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மங்கள கணபதி, அங்கையற்கன்னிகாம்பிகை, ஆதீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், கால பைரவர்
உள்பட சன்னதிகளின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல், முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த குடம் ஊர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை துவங்கியது. பக்தர்களின் "ஓம் நமசிவாய கோஷம் முழங்க, ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரகலசங்களுக்கு, சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதன்பின், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் முன்னிலை வகித்தார். வஞ்சிபாளையம் வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.