பதிவு செய்த நாள்
08
மே
2017
12:05
மதுரை : சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர் பவனி நடந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது.
16ம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாளின் பேரனான விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் தேரில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு
கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன்,வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும்
ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீதேறி புறப்பட்ட சிவன், அசுர வதம் நிகழ்த்தி உலகைக் காத்தார். இதை நினைவூட்டும் விதத்திலும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர்.இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக
வாழ்வு அமையும்.