ராமேஸ்வரம் கோயிலில் சேதமடைந்த பெயின்டிங் விரைவில் புதுப்பிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2011 10:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சேதமடைந்த கமலம் பெயின்டிங் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில் பிரகாரங்களில் மழை நீர் ஒழுகுவதை தடுக்க,பிரகாரத்தின் மேல் தளத்தில் சேதமடைந்த பழைய தட்டோடுகள் அகற்றி புதிய தட்டுடோடுகள் 25 லட்சம் ரூபாய் செலவில் பதிக்கப்பட்டது. மேல்தளத்தின் இரண்டு பக்கமும் உள்ள நீரோடும் பகுதிகளும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தின் உள் பகுதியில் மழைநீர் ஒழுகியதால் 2001 கும்பாபிஷேகத்தின் போது வரையப்பட்ட கமலம் பெயின்டிங் முழுவதும் சேதமடைந்து காட்சிஅளித்தது. கலையம்சம் கொண்ட ஓவியங்கள் மழைநீரினால் உதிர்ந்து போனதால், பாழடைந்த பிரகாரம் போல் காணப்பட்டது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: கோயில் மூன்றாம் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் கிழக்கு பகுதி உட்பட பல இடங்களில் 30 லட்சம் ரூபாய் செலவில் கமலம் பெயின்டிங் செய்யப்படஉள்ளது. 20 லட்சம் ரூபாய் செலவில் சேதுமாதவ தீர்த்தம் அழகுபடுத்தப்படும். பிரகார தூண்களில் அமைந்துள்ள சேதம்அடைந்த சிற்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் கும்பாபிஷேக திருப்பணியின் ஒரு பகுதியாக இதற்கான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.