இலஞ்சி குமாரர் கோயில் மண்டபம் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2011 10:11
குற்றாலம் : "இலஞ்சி குமாரர் கோயில் மண்படம் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களில மிகவும் புகழ்பெற்று விளங்குவது தென்காசி வட்டத்தில் அமைந்துள்ள இலஞ்சி குமாரர் கோயில் ஆகும். குமாரர் கோயிலில் தினமும் திருவனந்தல் விழா பூஜை, காலசந்தி, உச்சிகால பூஜை, சாயரட்சை, அர்த்தசாமம் என்று ஆறுகால பூஜை நடக்கின்றது. மேலும் ஐப்பசி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, மாசிமாதம் நாள் கதிர் திருவிழா, சித்திரை விசு, வைகாசி விசாகம் போன்ற விஷேச நாட்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் இவ்விழாக்களின் போது அலைமோதி காணப்படும். அகஸ்திய முனிவர், அருணகிரி நாதர் வழிபட்டு சென்றதாக புராண நூல்கள் கூறுகின்றன. கடந்த 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாண முதல் கவர்னராகிய மேதகு கிருஷ்ணசிங் (பவநகர் மஹாராஜா) குமார கடவுளை வழிபட்டு இயற்கை அன்னையின் வனப்பை கண்டு வியந்து சென்றிருக்கிறார். இதே ஆண்டு டிசம்பர் மாதம் திருவாடுதுறை ஆதீனம் 20வது பட்டம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், 1951ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி தருமபுரம் ஆதீனம் 25வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் மற்றும் பத்மானாபுரம் மகாராஜா முதல் குறுநில மன்னர்கள் வரை இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள். இப்படி பல சிறப்பு புகழ் வாய்ந்த கோயிலுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் நுழைவு வாயிலில் உள்ள மண்டபத்தை சீரமைப்பு பணி செய்யாமல் பாழடைந்து காணப்படுகிறது. இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. எனவே பாழடைந்து பராமரிப்பின்றி காணப்படும் இலஞ்சி குமாரர் கோயில் மண்டபத்தை சீரமைக்கவும், அகத்தியர் வழிபட்டு சென்ற சிவலிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டித் தர வேண்டும் என்பதே பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.