பதிவு செய்த நாள்
09
மே
2017
01:05
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில், 13 ஆயிரம் பேர் காப்பு கட்டி தீமிதித்தனர். இதில், ஒரு பக்தர் தீக்காயம் அடைந்தார்.திருத்தணி, பழைய திரவுபதியம்மன்
கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 13 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி
தீமிதித்தனர்.முதலில், பூங்கரகம் குண்டத்தில் இறங்கியதும், பின், 13 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீமிதித்தனர். இதில், திருத்தணி பகுதியைச் சேர்ந்த சரவணன்,35 என்பவர் கால்இடறி அக்னி குண்டத்தில் விழுந்ததில் காலில் தீக்காயம் ஏற்பட்டது.
பக்தர்கள் பாதுகாப்பிற்காக, டி.எஸ்.பி., பாலசந்தர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இரவு, 10:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்
வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம்
நிகழ்ச்சியுடன் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவடைந்தது.