பதிவு செய்த நாள்
09
மே
2017
01:05
வேலூர்: சித்ரா பவுர்ணமியையொட்டி, வேலூர் மாவட்டத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு, 225 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கபடுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 10ல் சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. இதில் பங்கேற்க, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக, மாநிலம்
முழுவதும் இருந்து, திருவண்ணாமலைக்கு, 2,146 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டம், வேலூரில் இருந்து, 100, ஆற்காட்டில் இருந்து, 50, திருப்பத்தூரில் இருந்து, 75 என, மொத்தம், 225 சிறப்பு அரசு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது என, வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். அதேபோல், ஆந்திரா மாநிலம், திருப்பதி, சித்தூர், பலமனேர், கடப்பாவில் இருந்து, வேலூர் வழியாக, 50, ஆந்திரா மாநில அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது என, வேலூர் டிப்போ மேலாளர் கிரி கூறினார். பெங்களூரு, கோலார் தங்கவயல்,
மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து, கர்நாடகா மாநில, 30 அரசு போக்குவரத்து கழக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக, வேலூர் கிளை டிப்போ மேலாளர் மகேஸ்வரன் கூறினார். இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும், இன்று (மே 9) முதல், 11 வரை திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.