திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான பத்திரிகை சம்பந்த விநாயகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடத்தி பணிகள் துவங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் டிசம்பர் 8ம் தேதி முக்கிய திருவிழாவான அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹாதீபமும் ஏற்றப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில், இந்த ஆண்டு தீப திருவிழாவினை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பிதழ்கள், சுவர் விளம்பர போஸ்டர்கள், அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனை விநியோகிப்பதற்காக முதன் முதலில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு முறைப்படி பத்திரிகை விநியோகிக்கும் பணி துவங்கியது. இதனை முன்னிட்டு சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டு திருவிழா பத்திரிகையை பெற்று சென்றனர். கோவில் இணை ஆணையர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.