பதிவு செய்த நாள்
11
மே
2017
02:05
மதுரை, சபரிமலையில் புதிய கொடிமரம் அமைக்கும் பணியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாக தொண்டர்கள் 2000 பேர் ஈடுபட உள்ளனர். மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய கொடிமரத்துக்கான மரம், கேரள மாநிலம் கேந்தி அருகே வயக்கரையில் வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருந்த 64 வயதுடைய தேக்கு மரம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2015 ல் பம்பை கொண்டு வரப்பட்டது.பம்பையில் கொடிமரத்திற்கான பணிகள் முடிந்து எண்ணெய் தோணியில் ஊற வைக்கப்பட்டது. மே 2 முதல் கொடிமரத்திற்கான செப்புத்தகடுகளில் தங்கம் பதிக்கும் பணி நடக்கிறது.
இக்கொடிமரம் மே 22ல் சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 4.5 கி.மீ., துாரம் 18 பகுதிகளாக பிரித்து பகுதி ஒன்றிற்கு 100 பேர் வீதம் பம்பை நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக கொடிமரத்தை சன்னிதானம் எடுத்து செல்வார்கள். 18 குழுக்களில் 14 குழுக்களின் பணிகளை ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் மேற்கொள்வர்.கொடிமரத்தை தோளில் சுமந்து செல்லும் பணி 20 தொண்டர்படை தளபதிகளின் தலைமையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 2000 தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். கொடிமரத்தை மே
22 ல் காலை பம்பையில் இருந்து சீருடை அணிந்த, விரதம் இருக்கும் தொண்டர்கள் தோள் மீது சுமந்து கொண்டு மாலை சன்னிதானம் சென்றடைவர். மே 21 தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் வேலாயுதன்நாயர், மாநில அமைப்பு தலைவர், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.