பதிவு செய்த நாள்
15
மே
2017
11:05
திருச்சி : மழை பெய்ய வேண்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மூலவர் சன்னிதானத்தில் உள்ள பலிபீடத்துக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மூலவர், உற்சவர் நம்பெருமாள் உள்ளிட்டோரோடு கோவிலில் உள்ள கொடிமரமும், பலிபீடமும் ஸேவிக்க சிறந்தது என்பது ஐதீகம். உலகில் அநீதி அதிகரிக்கும்போதும், மழை குறைந்து மக்கள் வாடும்போதும், கொடிமரம் மற்றும் பலிபீடத்துக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடத்தப்படுவது ஸ்ரீரங்கம் கோவிலின் பராம்பரிய வழக்கம். மன்னராட்சி காலத்தில் மன்னர் அனுமதியும், மக்களாட்சி காலத்தில் அரசின் அனுமதியும் பெற்று, பால், பன்னீர், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை கொண்டு கோவில் நிர்வாகம் அபிஷேகம் நடத்துகிறது. தற்போது நிலவும் கடும் கோடை காரணமாக மழைவேண்டியும், உலக நன்மைக்காகவும், நேற்று கொடிமரம் மற்றும் பலிபீடத்துக்கு அபிஷேகம் துவங்கியது. மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை திருமஞ்சனம் நடக்கிறது.