பதிவு செய்த நாள்
15
மே
2017
11:05
திருத்தணி, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி கிராமங்களில், திரவுபதியம்மன் மற்றும் மாத்தம்மன் கோவில்களில், நேற்று, தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஒரே நாளில், 10 இடங்களில் நடந்த தீமிதி திருவிழாவால், பக்தர்களின் இடையே கொண்டாட்டம் கரை புண்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜாநகரம், வங்கனுார், வீரகோவில் மோட்டூர், விளக்கணாம்பூடி புதுார் ஆகிய இடங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், இரண்டு வாரங்களாக, தீமிதி திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில், நேற்று, உச்சகட்ட போர் நடத்தப்பட்டது. 18ம் நாள் போர்க்களம் நிகழ்வான துரியோதனன் படுகளம், காலை, 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டது. ஒரே நாளில், ஆறு கோவில்களில், துரியோதனன் மற்றும் பீமசேனன் வேடம் அணிந்த தெருக்கூத்து கலைஞர்கள், படுகளம் நிகழ்ச்சியை நடத்தினர். மாலை 6:00 மணிக்கு, திரவுபதியம்மனுடன் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தில் நடந்த திரவுபதி அம்மன் தீமிதி திருவிழாவில், நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அதே போல், திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு, வெங்கடாபுரம், கொல்லகுப்பம் மற்றும் காவேரிராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாத்தம்மன் கோவில்களில், நேற்று, தீமிதி விழா நடந்தது. காலையில், அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மூலவர் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். -நிருபர் குழு -