பதிவு செய்த நாள்
15
மே
2017
12:05
திருப்பூர் : மழை பொழிய வேண்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால், நேற்று திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், திருமுருன்கன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், தாராபுரம், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு யாகம் நடந்தது.சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய, 7ம் திருமுறை, மழைப்பதிகம் ஒலிக்க, சிவாச்சார்யார்கள், புனித நீர் கலசம் ஆவாஹணம் செய்து, பர்ஜன்ய சூக்த மந்திரத்தை, 108 முறை பாராயணம் செய்து, யாகம் நடத்தினர். அதன்பின், சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி ராகம், மேக வர்ணம், கேதாரம் ஆனந்த பைரவி போன்ற ராகங்கள் இசைக்கலைஞர்களால், இசைக்கப்பட்டு, மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.