பராமரிப்பில்லாத அகத்தியர் தீர்த்தக்குளம்: பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2017 12:05
கீழக்கரை: திருப்புல்லாணியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் சேதுக்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது அகத்தியர் தீர்த்தக்குளம். இந்தக்குளத்தின் கரைப்பகுதி பலப்படுத்தப்படாததால் சுற்றிலும் கருவேல முட்செடிகளால் ஆக்கிரமித்துள்ளது. சாலையோரத்தில் இக்குளம் புலப்படாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பியுள்ளது. இக்குளத்திற்கு அருகே சின்னக்கோயில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், வெள்ளை பிள்ளையார், மாமுனிவர் அகத்தியர் கோயில்கள் உள்ளன.
சேதுக்கரையை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், முன்னொரு காலத்தில் தமிழ்மா முனிவர் அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபொழுது, காலரா நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இக்குளத்தினை சுத்திகரணம் செய்து புனித நீராக்கி குணப்படுத்தினார் என்பது புராண வரலாறாகும். இக்குளம் இப்பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் இடமாகவும், வாகன வசதி இல்லாத காலங்களில் சேதுக்கரைக்கு வருகை தரும் யாத்திரீகர்கள் அகத்தியர் குளத்தில் நீராடிய பின்னரே சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இக்குளம் துார்வாரப்படாமலும், பராமரிக்கப்படாமலும் உள்ளதால் பக்தர்களின் கவனத்திற்கு தெரியாமல் உள்ளது. மேலும் இப்பகுதிகளில் ஏராளமான இறால் பண்ணை அமைந்துள்ளதால் அவற்றின் கழிவு நீரால் மரங்களும், குளத்து நீரும் பாழ்பட்டு வருகின்றன. மண்மூடி கிடக்கும் 4 கிணறுகளையும் துார்வாரி, அகத்தியர் தீர்த்தக்குளத்தில் படித்துறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழி கிடத்திட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.