பதிவு செய்த நாள்
18
மே
2017
12:05
பொள்ளாச்சி : தேவம்பாடிவலசு கிராமத்தில், பொன்னர் - சங்கர்(அண்ணன்மார்) கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு கிராமத்தில் பொன்னர் - சங்கர் (அண்ணன்மார்)கோவில் உள்ளது. ஆண்டுதோறும் திருவிழா நடத்தி, பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகமவிதிகளின்படி கடந்த 15ம் தேதி துவங்கியது. முன்னதாக, கோவில் கோபுர சீரமைப்பு திருப்பணிகள் துவங்கின. இதில், ஸ்ரீமகாகணபதி, கன்னிமார், நல்லதங்காள் மற்றும் அண்ணன்மார் (பொன்னர் சங்கர்) சன்னதிகள் அழகுற அமைக்கப்பட்டன. திருவிழா திருப்பணிகள் கடந்த,15ம் தேதி துவங்கியது. இரண்டாவது நாள் அம்மன் அழைப்பு, நல்லதங்காள் கரக ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து, பண்டார பொங்கல், கொம்பனுக்கு தழுகு வைத்தல், தீர்த்தம் கொண்டு வருதலும் நடந்தன. நேற்று அதிகாலை, 3.00 மணிக்கு அம்மன் அழைத்தல், கரக பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பொங்கலிடுதல், கிடாய் வெட்டுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் என, இரவு, 10.00 மணி வரை பல்வேறு பூஜைகள் நடந்தன. காலை, 8.00 மணி முதல் பொதுமக்கள் பங்கேற்ற மகா அன்னதானம் நடந்தது.