பதிவு செய்த நாள்
19
மே
2017
01:05
சிவகிரி: சிவகிரி அருகே, ராவுத்த குமாரசுவாமி கோவில், பொங்கல் விழாவில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், இந்து, முஸ்லிம்கள் வழிபட்டனர். சிவகிரி அருகே, காகம் கிராமத்தில், வீரமாத்தி அம்மன், ராவுத்த குமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா நடக்கும். கடந்த, 2014ல் நடந்த நிலையில், நேற்று பொங்கல் விழா நடந்தது. கண்ண கூட்டத்தினரின் குல தெய்வ கோவிலாக கருதப்படும் இங்கு, மூலவராக முருகரும், காவல் தெய்வமாக பட்ட துளுக்கர் மற்றும் பட்டாணி இராவுத்தரும் உள்ளனர். தமிழகத்தில் வேறு எந்த இந்து கோவிலிலும் இல்லாத வகையில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், ராவுத்தர் சுவாமி வழிபாடு இங்கு நடக்கிறது. ராவுத்தருக்கு தனியாக பொங்கல் படையலிட்டு வணங்கப்படுகிறது என்று, காகம் பகுதி மக்கள் கூறினர். பொங்கல் விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர். கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (19ம் தேதி) பகல், 12:00 மணிக்கு, மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.