கோயில் அருகே குப்பை தொட்டி துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 12:05
ராஜபாளையம்: தேசியநெடுஞ்சாலையான மதுரை- கொல்லம் ரோடு அருகே ராஜபாளையம் தென்காசி ரோட்டில் கோதண்டராமர் கோயில் பின்புறம் நகராட்சி குப்பை தொட்டிகளை வைத்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டில் கோதண்டராமர்கோயில், சொக்கர்கோயில், மாரியம்மன்கோயில் உட்பட தனியார் திருமண மண்டபங்கள், பொதுசத்திரம் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், கோதண்டராமர்கோயில் பின்புறம் நகராட்சியினர் மூன்று குப்பை தொட்டிகளை நிரந்தரமாக வைத்துள்ளனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, இந்த தொட்டிகளில் போட்டு வாகனம் மூலம் அகற்றுகின்றனர்.
தள்ளு வண்டிகளையும் நிறுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலும் பழுதானவைகளாக உள்ளன. கால்நடைகள் குப்பை தொட்டியை கிளறி, இரை தேடுகின்றன. இவை திடீரென ரோடு கடப்பதால், நெடுஞ்சாலை ரோட்டில் விபத்து அபாயம் உள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ரோட்டில் கிடக்கும் அசுத்தங்களை மிதித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரகாரம் சுற்றி வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது.
பக்தர் ராஜேந்திரன், ராஜபாளையம் நகராட்சி தென்மன்டல அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஆனால் கோயில் பின்புறம், கோயில் செல்லும் வழியில் குப்பை தொட்டிகளை வைத்துள்ளனர். நிம்மதி தேடி கோதண்ட ராமர்சுவாமி கோயில் வரும் பக்தர்கள், உட்கார்ந்து தியானிக்க முடியாத நிலையில், துர்நாற்றம் ஏற்படுகிறது. உட்கார்ந்த சில நிமிடங்களில் எழுந்து செல்கின்றனர். இந்த கோயில் கும்பாபிேஷகத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், குப்பை தொட்டிகளை உடனே இடம்மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.