பதிவு செய்த நாள்
22
மே
2017
12:05
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, அம்மனை திருத்தேரில் ஊர்வலம் கொண்டு சென்று, கோவிலை சுற்றிவரும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. முன்னதாக, நாள்தோறும் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம்
எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று, மாரியம்மனை சிறப்பு அலங்காரம் செய்து, திருத்தேரில் வைத்து கோவிலை மூன்று முறை சுற்றிவந்து, பக்தர்கள் ஊர்வலமாக
எடுத்து சென்று வழிபட்டனர். இதில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, மேலசிந்தலவாடி, புணவாசிப்பட்டி, கருப்பத்தூர், வல்லம், பிள்ளபாளையம், குளித்தலை, கரூர், கிருஷ்ணராயபுரம், திம்மாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்றனர்.
குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் காலனி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குட, தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு, மாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.