பதிவு செய்த நாள்
23
மே
2017
01:05
பொள்ளாச்சி : லக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு நாளை, 18 கிராமங்களில் மாவிளக்கு ஊர்வலமும், பூஜையும் நடக்கிறது. சுயம்பாக தோன்றி சூலத்துடன் வீற்றிருக்கும் சூலக்கல் மாரியம்மனுக்கு, ஆண்டு தோறும் திருத்தேர் திருவிழா நடத்தப்படுகிறது. அம்மனை வேண்டி, பொங்கலிட்டு நேரடியாக, 18 கிராம மக்கள் வழிபடுகின்றனர். இந்த ஆண்டுக்கான அம்மன் திருத்தேர் வடம்பிடித்தல் திருவிழா வரும், 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
நாளை காலை, 6.00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும் தொடர்ந்து பொங்கலிடுதலும் நடக்கிறது. இரவு, 7.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக, கடந்த 8ம்தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து பூச்சாட்டு, கிராம சாந்தி, வாஸ்துசாந்தி நடந்தது. கடந்த 16ம் தேதி கம்பம் நடுதலும், பூவோடு எடுத்தலும் பக்தியுடன் நடந்தேறியது. யாகசாலை ஆம்பம், கொடியேற்றம் நிகழ்வுகளும், இரவு, அம்மன் சிம்வவாகனத்தில் வீதியுலாவும் நடந்தது. இன்று வரை குதிரை மற்றும் சப்பர வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. மூன்று நாள் திருத்தேர் நிலைக்கு வந்ததும் தேர்க்கால் பார்த்தல், கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. 28ம் தேதி பகல், 12.00 மணிக்கு அம்மனுக்கு மகாஅபிேஷகமும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.