கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று மறு பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. கடந்த மே 2 ந்தேதி கொடியேற்று விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மே 8 முதல் 15 ந்தேதி வரை நடந்த மண்டகப்படி நிகழ்ச்சிகளில் நகரின் முக்கிய பகுதிகளுக்கு அம்மன் அலங்கார தேரில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நாயுடுபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்களால் பால்குடம் எடுக்கப்பட்டு புறப்பட்டது. திரளான பக்தர்கள் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பால்குடங்களை எடுத்து பெரிய மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் தலைவர் முரளி, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.