பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
பள்ளிப்பட்டு : களிமண்ணில் உருவாக்கப்பட்ட கங்கையம்மன், மூன்று நாள் திருவிழாவின் இறுதி யில், நேற்று மாலை, கங்கையில் கரைக்கப்பட்டார். இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ளது கங்கையம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மன் கோவில், கோடையில் கங்கையம்மன் ஜாத்திரை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த திங்கள் கிழமை பூங்கரகத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, கொள்ளாபுரியம்மன் கோவிலில் சிறப்பு உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, கொள்ளாபுரியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, நள்ளிரவு 12:00 மணிக்கு, கங்கையம்மன் உலா புறப்பட்டார். இரவு முழுவதும் நடந்த வீதியுலாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று, காலை, 10:00 மணிக்கு, காந்தி சிலை அருகே, வேப்பிலை குடிலில் கங்கையம்மன் எழுந்தருளினார். கங்கையம்மன் சிலை கற்சிலையாக இல்லாமல், களி மண்ணால் செய்யப்படுவதே வழக்கம். திருவிழாவின் இறுதியில் கங்கையில், அதாவது நீர்நிலையில் கங்கையம்மன் சிலை கரைக்கப்படுவது வழக்கம். அதே போல், நேற்று மாலை, மேள தாளத்துடன் ஊர்வலமாக புறப்பட்ட கங்கையம்மன், கொற்றலை ஆற்றங்கரையில் உள்ள ஊருணியில் கரைக்கப்பட்டார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.