பதிவு செய்த நாள்
26
மே
2017
11:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த வைகாசி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைகோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டு தலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.