பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
12:06
திருக்கண்ணபுரம், சவுரிராஜ பெருமாள் கோவிலில், நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால், காலம் காலமாக நடத்தப்பட்ட பிரம்மோற்சவம் நிறுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் என்ற ஊரில், சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அங்கு, மூலவர் நீலமேகப் பெருமாளாக அருள் பாலிக்கிறார்.
உற்சவர் சவுரிராஜப் பெருமாள், அமாவாசையன்று வீதி உலா செல்லும் போது, திருமுடி தரிசனம் கிடைக்கும். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோரால், மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம். இக்கோவிலில், தொன்று தொட்டு நடத்தப்படும் வைகாசி பிரம்மோற்சவம், நேற்று துவக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், நடக்கவில்லை. இதனால், பக்தர்களும், ஊர் மக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கோவில் வளாகத்தில், அறநிலையத்துறை வைத்த அறிவிப்பு பலகையில், ‘புனரமைப்பு பணிகளுக்காக, பாலாலயம் செய்யப்பட உள்ளதால், வைகாசி பிரம்மோற்சவம் நிறுத்தப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை கமிஷனருக்கு, கடிதம் எழுதிய போது, கோவிலில் பாலாலயம் செய்ய, அனுமதி அளிக்கப்படவில்லை என, தெரிய வந்தது. இந்நிலையில், கோவி லின் செயல் அலுவலருக்கு, நீண்ட நாள் விடுப்பு அளிக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்; புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம், இணை கமிஷனர் தலைமையில், 21 செயல் அலுவலர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. பின், கால அவகாசம் இல்லாததால், பிரம்மோற்சவம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர். தொன்று தொட்டு நடந்து வரும் பிரம்மோற்சவத்தை நடத்தி விட்டு, பாலாலயம் குறித்து, முடிவு செய்திருக்கலாம். இவ்வாறு பக்தர்கள் கூறினர். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பிரம்மோற்சவம் நடத்த, அறநிலையத்துறை தயாராகவே இருந்தது. கோவில் நிர்வாகிகள், இரண்டு தரப்பாக செயல்படுகின்றனர். அவர்களால் தான் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
– நமது சிறப்பு நிருபர் –