பதிவு செய்த நாள்
14
நவ
2011
12:11
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டலபூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோயிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை கேரள முதல்வர் உம்மன்சாண்டி நவ.,7 ல் திறந்து வைக்கிறார். கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்கள் சபரிமலையில் நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் எனப்படுகிறது. ஆண்டு முழுவதும் தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் நடை திறந்திருந்தாலும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் நடைபெறும் பூஜைக்கு தான் அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர். சீசன் காலத்தில் முக்கியமாக பிரசாத தட்டுப்பாடு தான் தேவசம் போர்டுக்கு ஒரு தீரா தலைவலியாக இருக்கிறது. அதை தவிர்க்க, அக்., 27 முதல் பிரசாதம் தயாரிக்கும் பணி துவங்குகிறது. கார்த்திகை முதல் தேதிக்கு முன் 25 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எல்லா நாட்களிலும் பகல் 12.30 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் மதியத்துக்கு பின், வரும் பக்தர்கள் சபரிமலையில் தங்குவதால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடுத்த நாள் நெய்யபிஷேகம் முடிந்து பக்தர்கள் திரும்பும் போது, அதிகாலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இதனால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மாளிகைப்புறம் கோயில் பின்புறம் காட்டின் உட்பகுதி வழியாக ராணுவ உதவியுடன் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக பக்தர்கள் சந்திராங்கதன் ரோட்டுக்கு சென்று விட முடியும். ஒரு வழிபாதை போல் இந்த பாலம் பயன்படும் என்பதால், நெரிசல் குறையும். இந்த பாலத்தை கேரள முதல்வர் உம்மன்சாண்டி நவ., 7 ல் திறந்து வைக்கிறார்.
பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களிலும் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக, மேற்கூரையுடன் கூடிய ஷெட்டுகள் கட்டப்படுள்ளது, சரங்குத்தியில்தான் பக்தர்கள் அதிக நேரம் கியூவில் காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே, இங்கு ஒரு பகுதியிலாவது கியூ காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலிமலை மற்றும் அப்பாச்சி மேட்டில் ஏற்றத்தின் கடினத்தை குறைக்கும் அளவு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இந்த ஆண்டு பெரும்பாலும் வியாபார ஸ்தாபனங்கள் அகற்றப்பட்டு விடும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. ஓட்டல்களுக்கு பதிலாக தனியார் உதவியுடன் நடத்தப்படும் அன்னதான திட்டம் விரிவு படுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்காக பாண்டித்தாவளத்தில் கடைகள் அமைக்க இடம் கொடுக்கப்படும்.
சீசனில் அதிகாலையில் 4 மணிக்கு பதிலாக இனி 3 மணிக்கு நடை திறக்கும். பகலிலும், இரவிலும் நடை அடைக்கும் நேரம் ஒரு மணி நேரம் வரை தள்ளி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு புல்மேட்டில் நடைபெற்ற துரதிஷ்ட சம்பவம் போல் இனி நடைபெறாமல் தடுக்க, அப்பகுதியில் வாகன போக்குவரத்தை முமுமையாக தடை செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சன்னிதானத்தில் பாண்டித்தாவளத்தில் அதிக பக்தர்களுக்கு மகரஜோதி தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மண்டல சீசன் தொடங்க இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.