பதிவு செய்த நாள்
14
நவ
2011
12:11
சபரிமலை: சபரிமலையில் வரும் மண்டல காலத்திற்குள், பக்தர்கள் வசதிக்காக 83 பணிகள் முடிக்கப்பட உள்ளன, மேலும், மண்டல காலத்தில் நடை திறப்பு நேரம் அதிகரிக்கப்படும் என்று, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட்வகேட் ராஜகோபாலன் நாயர் தெரிவித்துள்ளார்.
புதிய பணிகள் : இரண்டு கோடி ரூபாய் செலவில் சாலக்கயம் - பம்பா சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. பம்பை ஆற்றின் கரை 60 லட்சம் ரூபாய் செலவில் சிமன்டால் சீரமைக்கப்படுகிறது. 70 லட்சம் ரூபாய் செலவில் புதிய சர்வீஸ் சாலை அமைக்கப்படும் நீலிமலை ஏற்றத்தில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் மூன்று நிழற்பந்தல்கள் அமைக்கப்படும். சரங்குத்தியில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கப்படும். வரும் சீசன் முதல் மாளிகைப்புறம் கோவில் அருகே புதிய பிரசாத கவுன்டர் திறக்கப்படும். கோவிலுக்கு பின்புறம் ராணுவ உதவியுடன் புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் : தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் இங்கு பிரசாதம் வாங்கி விட்டு கோவிலின் பின்புறம் உள்ள புதிய இரும்பு பாலம் வழியாக சந்திராங்கதன் சாலைக்கு செல்ல வேண்டும். பெரும்பான்மையான வியாபார நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்படும். ஓட்டல்களுக்கு பதிலாக அன்னதானம் அதிகரிக்கப்படும். சன்னிதானத்தில் ஓட்டல்கள் மற்றும் தேவசம் போர்டின் அனுமதி இல்லாமல் யாரும் இனி சன்னிதானத்தில் அன்னதானம் நடத்த முடியாது பாண்டித்தாவளத்தில் குறிப்பிட்ட வியாபாரங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம் போர்டு செய்யும் இன்சூரன்சுக்கான ஏரியாவில், வண்டி பெரியாறு மற்றும் பீர்மேடு பகுதிகள் உட்படுத்தப்படும்.
நடை திறப்பு நேரம் : வரும் மண்டல காலத்தில், அதிகாலை 4.00 மணிக்கு பதிலாக 3.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகலில் நடை அடைக்கும் நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாலையில் 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.00 மணிக்கு அடைக்கப்பட்டு வந்த நடை இனி நள்ளிரவு 11.45 மணி வரை திறந்திருக்கும்.
விரைவாக தரிசனம் கிடைக்கணுமா?: சபரிமலை: சபரிமலையில் குவியும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்காமல், விரைவாக தரிசனம் முடித்து திரும்ப போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு, போலீசார் அறிவிக்க உள்ள வெப்-சைட்டில் பக்தர்கள் முன்னரே பதிவு செய்ய வேண்டும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலோர் மண்டல மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்காக வருகின்றனர். அக்கால கட்டங்களில் சபரிமலையில் நெரிசல் அதிகரித்து, நீண்ட வரிசையில் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியது நேரிடும். இதை தவிர்க்க மாநில போலீசார், தங்களது வெப்-சைட்டில் முன்னரே பதிவு செய்து விட்டு வரும் பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்காமல், விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் மூலம், ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இதற்கான வெப்-சைட் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., பி.சந்திரசேகரன் தெரிவித்தார்.