கம்பம்: கம்பம் நந்தகோபாலன் கோயில் பட்டத்துக் காளை நேற்று இறந்தது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம், கம்பத்தில் பசுக்களை தெய்வமாக வணங்கும் நந்தகோபாலன் கோயில் உள்ளது. இங்கு சுவாமி விக்ரகங்கள் கிடையாது. பட்டத்துக் காளைக்குத்தான் பூஜை நடைபெறும். இதை நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு என அழைக்கின்றனர்.
இக்கோயிலில் 20 ஆண்டுகளாக இருந்த பட்டத்துக் காளை நேற்று காலை 7:00 மணிக்கு இறந்தது. இதையடுத்து அந்த காளைக்கு உரியவர்கள் எனக் கருதப்படும் பட்டக்காரர், பூசாரியார், கோடியப்பனார், பெரியதனக்காரர் ஆகிய நால்வரும் இறுதிச் சடங்குகள் செய்தனர். பட்டுத் துண்டு காளை மீது போர்த்தப்பட்டது. பின்னர் பட்டத்துக் காளை உடலை சுமந்து தேர் சென்றது. மாலையில் ஊர்வலமாக வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு, இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் அடக்கம் நடந்தது.வயது முதிர்வால் நேற்று இறந்த காளை, 6 மாத கன்றுக்குட்டியாக இருந்தபோது 1997 ஆகஸ்ட் 17ல் பட்டத்துக் காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்த பட்டத்துக் காளை விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. பட்டத்துக் காளை இறந்ததால் காமுகுல ஒக்கலிக கவுடர் இன மக்கள் வசிக்கும் கம்பம் மற்றும் சுற்றியுள்ள 48 கிராமங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.