பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
05:06
ராமானுஜர் திருநாராயணபுரத்தில் பகவான் மஹாவிஷ்ணுவின் பூஜைகளை முடித்துவிட்டு ஒருநாள் அயர்ந்து உறங்கினார். அப்போது மஹாவிஷ்ணு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜரின் கனவில் தோன்றினார். ராமானுஜா! உன் தொண்டில் நான் மகிழ்ந்தேன். ஆனால், எளிய பக்தர்களும் என்னைக் காண, டில்லி பாதுஷாவிடம் உள்ள என் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளையைக் கொண்டு வா என்று கூறினார். ராமானுஜர் இரண்டு மாதங்கள் பயணம் செய்து டில்லி அரண்மனையை அடைந்தார். அவரது திருமேனி ஒளியையும் அறிவையும் கண்டு மகிழ்ந்த பாதுஷா, அவர் வந்த காரணத்தை வினவினார். அரசே! நான் செல்வப்பிள்ளையை எடுத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ராமானுஜர் கூற,
மன்னர், அப்படியே ஆகட்டும்! என்றார். எவ்வளவு தேடியும் செல்வப்பிள்ளையின் விக்கிரகம் கிடைக்கவில்லை. ராமானுஜர் கண்களில் நீர் மல்கக் கைகளைக் கூப்பியபடி வணங்கினார். ராமப்ரியரே! என் செல்வப்பிள்ளையே! எங்கிருக்கிறீர்? வாருங்கள்! என்று மனமுருகி வேண்டினார். அரசகுமாரியின் பெயர் பீபீ லகிமார். அவள் செல்வப் பிள்ளையை தனது மஞ்சத்தில் வைத்து அன்புடன் பூஜித்து வந்தாள். ராமானுஜர் அழைத்தபோது அவள் தனது அறையில் இல்லை. அந்த நேரத்தில் ராமானுஜரின் அழைப்பிற்கு இணங்க செல்வப்பிள்ளை மஞ்சத்திலிருந்து கீழிறங்கி அவருடன் சென்றது. சிலையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று அரசகுமாரி பாதுஷாவிடம் கேட்பாள் என்பதை உணர்ந்த ராமானுஜர். உடன் வந்த சீடர்களுடன், வாருங்கள்! அரசனின் ஆட்கள் நம்மைத் தேட வரும் முன், நாம் இந்த நாட்டை விட்டுச் சென்றுவிடவேண்டும் என்று கூறினார் ராமானுஜர்.
அவர்கள் சென்ற வழியில் புலையர்கள் இருந்தனர். சிலையுடன் வரும் ராமானுஜரிடம் அவர்கள் கைகூப்பி வணங்கி நின்றனர். ஐயா! இது என்ன கோயில் சிலையா? நாங்க இதை இந்த நாட்டின் எல்லை வரை தூக்கி வருகிறோம். கொடுங்கள் என்று கேட்டனர் ராமானுஜரிடம். ராமானுஜரோ, ஆஹா! என்னே கருணை! எல்லாம் பகவான் நாராயணரின் விளையாட்டு! சரி, பத்திரமாக எடுத்து வாருங்கள்! என்று கூறினார். நாட்டின் எல்லையைக் கடந்தும் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட அந்த புலையர்களிடமிருந்து சிலையை பெற்ற ராமானுஜர் அவர்களுக்கு நன்றி கூறினார். தென்னாட்டில் மேல்கோட்டையில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு செல்வப்பிள்ளையைக் கோயிலினுள் சென்று தரிசிக்கலாம் என்றும் ராமானுஜர் ஆசி கூறினார். அது இன்றும் தொடர்கிறது. நாராயணரின் சிலை காணாமல் போனதை அறிந்த பீபீ லகிமார் தன் தந்தையிடம் கூறலானார். தந்தையே! அந்தச் சிலை எனக்கு வேண்டும்! அது இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது! என்று அழுதுக்கொண்டே புலம்பினார். உடனே மன்னர், யாரங்கே! உடனே சென்று அந்தச் சிலையை மீட்டு வாருங்கள்! என்று கட்டளையிட்டார் சேவகர்களுக்கு.
அப்படியே செய்கிறோம், ஹுஸூர்! என்று தலைகுனிந்து வணங்கி சென்றனர். சிலையைத் தேடி அரசகுமாரியும் காட்டிற்கு சென்றாள். வீரர்களும் பணிப்பெண்களும் அவளுடன் புறப்பட்டனர்... மற்றொரு நாட்டின் இளவரசனான குபேர் பீபீ லகிமாரை விரும்பினான். ஆனால் அவள் விக்கிரகத்தைத் தேடிச் செல்வதை அறிந்த குபேர், அவளைப் பின்தொடர்ந்தான். பீபீ லகிமார் உடன் சென்ற பணிப்பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இவளுக்கு என்ன ஆயிற்று? ஒரு பொம்மைக்காக இப்படி அழுகிறாளே! என்று. டோலியில் உள்ள பீபீ லகிமா, நாராயணா! நீ எங்கு இருக்கிறாய்! எனக்கு உனது காட்சியைக் கொடு! என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டாள். ஒருநாள் சிப்பாய்களுக்குத் தெரியாமல் பீபீ லகிமார் நாராயணரைத் தேடி ஒரு காட்டுப் பகுதிக்களுள் சென்றாள். இளவரசன் குபேர் அவளைப் பின் தொடர்ந்தான். நாராயணா! உங்களைக் காணாது தவிக்கிறேனே! எங்கு போய்விட்டீர்கள், ஹுஸூர்? என்று புலம்பிக்கொண்டே சென்றாள்.
அரசகுமாரியின் மனநிலையை அறிந்த குபேருக்கு மனம் மாறியது. அவன் பீபீ லகிமாருக்குப் பணிவிடைகள் செய்தான். குபேர் தரும் கனிகளை அவள் உண்டாள். பகல் முழுவதும் விக்கிரகத்தைத் தேடி நடந்தாள். இரவில் ஓய்வெடுத்தாள். அம்மணி! பழங்களைச் சாப்பிடுங்கள்! என்று குபேர் கொடுக்க. பீபீ லகிமாவும் எல்லாம் நாராயணரின் பிரசாதம்! என்று வாங்கி சாப்பிட்டாள். இப்படியே, நாட்கள் நகர்ந்தன. இறுதியில் அவர்கள் இருவரும் மேல்கோட்டையை அடைந்தனர். ஹுஸூர்! என்னைத் தனியாக விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்களை மறுபடியும் கண்டு கொண்டேன். இனி உங்களைப் பிரிய மாட்டேன்! என்று கண்களில் கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டாள். ராமானுஜர் முஸ்லீம் அரசகுமாரியின் பக்தியைக் கண்டு, அம்மா! உனது பக்தியைக் கண்டு மகிழ்ந்தேன். உள்ளே சென்று தரிசனம் செய் உண்மையான பக்திக்கு சாதி, மதம் எதுவும் இல்லை என்று கூறினார். பீபீ லகிமார் இறைவனான செல்வப்பிள்ளைக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள். இறுதியில் அவள் செல்வப்பிள்ளையுடன் கலந்தாள். அதை அறிந்த குபேர் சோகத்தில் ஆழ்ந்தான். அரசகுமாரியின் தூய பக்தியின் மகிமையைக் கண்ட குபேரும் திருமாலிடம் பக்தி கொண்டு ஸ்ரீரங்கம் சென்றான். அங்கு கோயிலுக்குள் அவனை யாரும் அனுமதிக்கவில்லை. கோபுரத்திற்கு வெளியே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தான்.
நாராயணா! எனக்கும் உன்மீது பக்தியைக் கொடு! நானும் உன்னை அடைய வேண்டும்! என்று வேண்டிக்கொண்டான். குபேர் தியானத்தில் ஆழ்ந்தான். அரங்கன் அவன் மனதில் காட்சியளித்தார். அரசகுமாரனே! எல்லோருக்கும் முக்தியளிக்க நான் ஜகன்னாதனாக புரியில் இருக்கிறேன்! அங்கு செல்வாய்! ஐயனே! என்னை ஆட்கொண்டு விட்டீர்கள்! என்ன பேறு பெற்றேன்! தங்கள் சித்தம் என் பாக்கியம்! என்று கைகூப்பி வணங்கி நின்றான். ஜகன்னாத க்ஷேத்திரமான புரியை குபேர் அடைந்தான். அங்கு கோயில் கொண்டுள்ள ஜகன்னாதரை தரிசித்தான். ஜகன்னாதா, நாராயணா! எனது பிறவியின் பயனை அடைந்தேன்! என்று மனதழுதழுக்க அழுதுக்கொண்டே வணங்கினான். புரி ஜகன்னாதரின் அருளைப் பெற்றபின் குபேர் எல்லா உயிரினங்களிலும் நாராயணரைக் காணும் பேறு பெற்றான். ஒருநாள் அவன் ரொட்டி சுட்ட போது ஒரு நாய் ரொட்டியை இழுத்துச் சென்றது. அதை விரட்டி சென்ற குபேர். ஜகன்னாதா, நாராயணா! நெய் தடவித் தருகிறேன். வெறும் ரொட்டி தொண்டையில் குத்திவிடும் என்று விரட்டிக்கொண்டே ஓடினார். கல்வியும் அடக்கமும் நிறைந்தவர்களிடமும், பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், நாயை உண்ணும் புலையனிடமும் ஆத்மஞானிகள் சமதரிசனம் உடையவர்கள் என்னும் பகவத் கீதையின் வாக்கியத்திற்கு இலக்கணமாகக் குபேர் நிகழ்ந்தான். பரம பக்தர்களான பீபீ லகிமாரையும் குபேரையும் ராமானுஜர் வெகுவாக மதித்தார். இன்றும் பீபீ நாச்சியார் என்னும் பெயரில் அந்த அரசகுமாரியின் விக்கிரகம் சில வைணவக் கோயில்களில் வழிபடப் பெறுகிறது.