பதிவு செய்த நாள்
08
ஜூன்
2017
11:06
பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழநி, வைகாசி விசாகத்தை முன்னிட்டு. பழநி முருகன் கோயிலில் பால்குடங்கள் எடுத்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வெளிமாவட்டம், உள்ளூர் பக்தர்கள், அலகுகுத்தி வந்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கம் சார்பில் வைகாசி விசாக திருவிழா நடந்த பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து, நகர முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திருஆவினன்குடிகோயிலில் வழிபாடுசெய்தனர். பின் மலைக்கோயிலுக்கு சென்று மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.
திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில் சுவாமி புறப்பாடு, வலம் வந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.