பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
01:06
குன்னுார் : ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படும், குன்னுார் மகாலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் ஆழ்வார்பேட்டையில், படுகர் இன மக்களின், மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமி, சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஜூன் மாதம், திங்களன்று மட்டும் நடை திறந்து, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலை, 7:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, பகல், 1:30 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்; பின், நடை அடைக்கப்பட்டது. படுக இனமக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். விழாவை நடத்தி வரும், கோடமலை கிராம நிர்வாகிகள் கூறுகையில், ’எங்கள் கிராமத்தில், முதல் கன்று ஈன்ற மாட்டின் பால், பச்சை மூங்கிலில் சேகரித்து, எடுத்துவரப்படும். அதைக்கொண்டு, மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதே மாட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் மட்டும், கோவிலில் விளக்கெரிய பயன்படுத்தப்படும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே, கோவில் நடை திறந்திருக்கும் ’ என்றனர். இதன்படி, ஏற்றப்பட்ட நெய் விளக்கு, ஆறு மணி நேரம் மட்டும் எரிந்ததால், அதுவரை, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.