எமனேஸ்வரம்: எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோத்ஸவ விழாவில், மாணிக்கா மண்டகப்படியில் பெருமாள் அவதார சேவையில் அருள்பாலித்தார். இக்கோவிலின் வசந்தோத்ஸவ விழாவில் ஜூன் 9 ல் அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகையில் இறங்கினார்.
பின்னர் காலை 11:00 மணிக்கு மஞ்சள்பட்டிணம் மண்டகப்படியில் இருந்து குதிரை வாகனத்தில் பெருமாள் அலங்காரமாகி பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் வீதிவலம் வந்து அன்று அதிகாலை 2:00 மணிக்கு வண்டியூரை அடைந்தார்.
ஜூன் 10 இரவு 9:00 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள், மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தார். தொடர்ந்து துடுகுச்சி, மகாலட்சுமி மண்டகப்படிகளில் கருட, அனுமன் வாகனங்களில் எழுந்தருளினார்.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மாணிக்கா மண்டகப்படியில் பெருமாள் கிருஷ்ண, ராம, பலராம, கல்கி, மோகினி அவதாரங்களில் வலம் வந்த பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நிறைவடைந்து, பெருமாள் ஏகாந்த சேவையில் அரவிந்த் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். இன்று இரவு பூப்பல்லக்கில் அழகர் திருக்கோலத்துடன் வீதிவலம் வருகிறது. நாளை காலை 9:30 மணிக்கு மேல் பெருமாள் கோயிலை அடைவார்.