பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
02:06
மீஞ்சூர்: திருவுடையம்மன் கோவிலில், அடுத்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், கோவிலின் முகப்பில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள தெருச்சாலையை புதுப்பித்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது.
மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில், 33 ஆண்டுகளுக்கு பின், குடமுழுக்கு செய்வதற்காக புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம், 5ம் தேதி, திருவுடையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது. இதற்காக கோவில் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், கோவிலின் நுழைவுப் பகுதியில் உள்ள தெருச்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கும்பாபிஷேகம் நடை பெறும் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவர் என்பதால், கோவிலின் நுழைவுப்பகுதியில் உள்ள தெருச்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.