வத்திராயிருப்பு: கூமாப்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா விமரிசையாக நடந்தது. பக்தர்கள் அக்கினிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இக்கோயிலுக்கான வருடாந்திர உற்சவ விழா, பொங்கல் விழாவும் காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்கின. நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் அம்மன் முன் காப்புக்கட்டிக்கொண்டனர். பின்னர் காலையில் பக்தர்கள் ஊர்வலமாக கண்மாய் கரையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று கரகம் எடுத்து வந்தனர். பெண்கள் கரக வழிபாடு செய்து கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளச்செய்தனர். பின்னர் மூலஸ்தான அம்மனுக்கு பக்தர்கள் கொண்டுவந்த புனித நீரால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பர எழுந்தருளல், வீதியுலா நடந்தது. பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தபடியும், ஆயிரம்கண் பானை மண் உருவபொம்மைகளை சுமந்தபடிஅம்மனுடன் வீதியுலா சென்றனர்இதைதொடர்ந்து பெண்கள் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். பிள்ளைமார் சமுதாயத்தினர், கோயில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்தனர்.