பதிவு செய்த நாள்
16
நவ
2011
12:11
நாமக்கல் : ஒஸக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 33ம் ஆண்டு கொடியேற்று விழா, நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. நாமக்கல் அடுத்த ஒஸக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் மற்றும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாத அமாவாசையை முன்னிட்டு (தொட்டு அப்ப) கொடியேற்று விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு, திருமஞ்சனம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு, கொடியேற்று விழா நடக்கிறது. விழாவுக்கு, ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் நிறுவன உரிமையாளர்கள் ராஜேஸ்வரி, வசந்தா ஆகியோர் குத்துவிளக்கேற்றுகின்றனர். சேந்தமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் சாந்தி, சவுடேஸ்டரி அம்மன் படத்தை திறந்து வைக்கிறார். டாக்டர்கள் இளங்கோ, ராணி, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சேலம், நாமக்கல் ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் மற்றும் தங்கமாளிகை உரிமையாளர் சீனிவாசன் கொடியேற்றி வைக்கிறார். சேலம் விநாயகா மிஷின்ஸ் மருத்துவமனை டாக்டர் ஈஸ்வரன் வாழ்த்தி பேசுகிறார். தொடர்ந்து பகல் 1.30 மணிக்கு, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, மேனேஜிங் டிரஸ்டி ராமராஜூ, விழாக் குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.