பதிவு செய்த நாள்
16
நவ
2011
12:11
பேரூர் : பச்சாபாளையத்தில், ஸ்ரீ வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கே.ஜி., பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முளைப்பாரிகை எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதல்கால யாக பூஜைகளும், நேற்று, காலை 7 மணிக்கு இரண்டாம் கால வேள்விபூஜை, 108 திரவியாஹுதி, மகாபூர்ணாஹுதி, திருமுறை விண்ணப்பம் செய்விக்கப்பட்டு கலச வழிபாடு நடந்தது. காலை 9 மணிக்கு, ஸ்ரீ வித்யா கணபதிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. அபிஷேக அலங்கார பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. வேள்விப்பணிகளை, கனகநாதர் வேள்விவழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். கே.ஜி., பள்ளி நிறுவனர் கணேசன், தாளாளர் கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.