பதிவு செய்த நாள்
16
நவ
2011
05:11
சபரிமலை: மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை மாலையில் 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டாலும் காலையிலேயே சன்னிதானத்தில் கூட்டம் அலைமோதியது.நாளை காலை முதல், மண்டல கால பூஜைகள் துவங்கும். புதிய மேல்சாந்திகள் இன்று பதவியேற்பர்.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவங்கள், நவ., 16ம் தேதி முதல், ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறும். இதில், மண்டல கால உற்சவத்திற்காக அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்தியாக, பாலமுரளி பொறுப்பேற்கும் நிகழ்வுகள் துவங்கும். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவருக்கு, தந்திரி, அபிஷேகம் செய்விப்பார். பின் அவரை தந்திரி, சன்னிதிக்கு அழைத்துச் சென்று, அய்யப்பனின் மூலமந்திரம் காதில் ஓதுவார்.அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் சன்னிதியில் ஓராண்டு காலம் பணியாற்ற புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஈசுவரன் நம்பூதிரிக்கும், இதே போன்ற சடங்குகள் நடத்தப்படும். கார்த்திகை மாதம் முதல் தேதியான, நாளை காலை முதல், அவர்கள் தங்கள் சன்னிதிகளில் மேல்சாந்திக்கான பணிகளை துவக்குவர்.பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில், நடை, கூடுதல் நேரம் திறந்திருக்கும். பூஜை, பிரசாதங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்து பக்தர்கள் விரைவாகவும், எளிதாகவும் பம்பைக்கு திரும்ப வசதியாக, சன்னிதானத்திற்கு பின்புறம் பெய்லி பாலம் திறக்கப்பட்டுள்ளது. அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை, பக்தர்கள் வாங்குவதற்கு வசதியாக, கூடுதல் கவுன்டர்கள் செயல்படும்.