பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
01:06
திருப்பூர் : சிவன்மலை அருகேயுள்ள ஆத்தா குளம், தன்னார்வலர்கள் மூலம் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கயம், சிவன்மலை அருகே, 10 ஏக்கர் பரப்பில், ஆத்தாகுளம் உள்ளது. சிவன்மலை கிரிவலப்பாதையில் உள்ள இக்குளத்துக்கு, மழைக்காலங் களில் நீர் வரத்து உள்ளது. இக்குளம், 25 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல், முட்செடிகள், புதர்கள் மற்றும் மண் திட்டுகள் நிறைந்து காணப்பட்டது. குளத்தின் நீர் கொள்ளளவு பெருமளவு குறைந்தது. இக்குளத்தை தூர் வாரி, நீர் தேங்கும் வகையில் சீரமைப்பு செய்ய அனுமதி கேட்டு, வேர்கள் அமைப்பு மற்றும் சிவன்மலை பகுதி இளைஞர்கள், ஜமாபந்தி நிகழ்ச்சி யில், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அனுமதி வழங்கப் பட்டதை அடுத்து, மே, 21ல், குளம் சீரமைப்பு பணி துவங்கியது.
குளத்தில், 500 மீட்டர் பரப்பில், 10 அடி அகலம், 12 அடி ஆழத்துக்கு, 500 லோடு மண் எடுத்து, குளத்தை தூர் வாரி, கரை பலப்படுத்தப்பட்டது. குளத்தில் உள்ள மரங்களை, பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில், ஏறத்தாழ, 2 லட்சம் ரூபாய் செலவில், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர். கடந்த ஒரு மாத மாக நடந்த இப்பணி, தற்போது முழுமையடைந்துள்ளது. மழைக்காலத்தில் 2 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கும் வகையில், குளம் தற்போது தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவன்மலை பகுதி இளைஞர்கள், வேர்கள் அமைப்பினர் மற்றும் இதில் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.