பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
11:07
ஜம்மு: மோசமான வானிலையால் தாமதமான, அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் துவங்கியது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, பலத்த பாதுகாப்புடன் மலைப் பாதையை கடந்து குகைக் கோவிலை அடைந்த பக்தர்கள், நேற்று பனி லிங்க தரிசனம் செய்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, அமர்நாத் குகைக் கோவிலில், பனி லிங்க தரிசனத்திற்காக, ஹிந்துக்கள் ஏராளமானோர், ஆண்டு தோறும் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, அமர்நாத் புனித யாத்திரை வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தின் தலைவராக, ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர், எம்.என்.ஓரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலையால், அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள், குகைக் கோவிலை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது; பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மலை அடிவாரம் மற்றும் மலைப் பாதையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், வானிலை சீரானதை அடுத்து, அமர்நாத் யாத்திரை மீண்டும் துவங்கியது. முதல் குழுவில் பயணித்த பக்தர்களுடன், மாநில முதல்வர், என்.என். ஓராவும், நேற்று பனி லிங்க தரிசனம் செய்தார். குகைக் கோவிலில் நேற்று நடந்த துவக்க நாள் பூஜையில், அவர் பங்கேற்றார். இதையடுத்து, இரண்டாம் கட்ட தரிசனத்திற்காக, மலை அடிவாரத்தில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள் குழு, நேற்று மலை பயணத்தை துவங்கியது. அவர்களுடன் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரும் பயணிக்கின்றனர்.