திருமலை - ஏழுமலை எனப்படும் புண்ணியமலை முழுவதும் சாலிக்கிரமம் எனப்படும் புனிதக் கல் நிறைந்தது. இந்தக் கல்லை இரண்டாகப் பிளந்தால் உள்ளே பெருமாளின் சக்கர வடிவம் காட்சி அளிக்கும். இந்த மலையில் அறிய பல மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகை மீது பட்டு அருவிகளில் நீர் வருகின்றது. எனவே இங்குள்ள அருவிகள் மருத்துவ குணம் மற்றும் பாவங்களை போக்கும் மகிமை கொண்டது. திருமலையான் தரிசனம் செய்ய மலைக்கு நடைபாதையில் செல்வது மிகவும் சிறந்தது. நடைபாதையில் கோவிந்தா கோவிந்தா என்கிற நாமத்தை சொல்லி நடக்கும்போது நமக்கு வைகுண்ட வாசலே திறக்கும் புண்ணியம் கிடைக்கும். திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புண்ணிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, பின்னர் வராஹ சுவாமியை வணங்க வேண்டும். திருமலை முன்னர் வராஹ ஸ்தலமாக இருந்த இடம். இவரை வணங்க பூமி, வீடுகள் போன்றவை கிடைக்கும்.
பிரம்மமோற்சவம் போது பெருமாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காட்சி அளிப்பார். ரத சப்தமி அன்று ஒரே நாளில் அனைத்து வாகனத்திலும் திருவீதி உலா வந்து ஒரே நாளில் ஏழு வாகனங்களில் காட்சி அளிப்பார். யுகாதி - அன்று திருமலையில் சிறப்பு பூஜை, புது பஞ்சாங்கம் வாசிப்பது முக்கிய நிகழ்வு. அன்று மூலவரை தரிசனம் செய்து வெளியே வந்தால் உற்சவர் அலங்காரத்துடன் வாசலில் காட்சி அளிப்பார். யுகாதி அன்று மூலவர் - உற்சவர் ஒரு சேர தரிசனம் கிடைக்கும். திருமலையில் தினமும் காலையில் சுப்ரபாதம் பாடல் ஒலிக்கும். ஆனால் மார்கழி மாதம் மட்டும் ஆண்டாள் திருப்பாவை பாடல் ஒலிக்கும்.