பதிகம், பாசுரம், பாமாலை - அனைத்தும் ஒரே பொருள்தானே?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2017 02:07
இறைவனின் லீலைகளை, பெருமைகளை பல தரப்பட்ட பக்தர்களும் பல பாஷைகளில் பாடல்களாக பாடியுள்ளார்கள். இவைகளில் சுந்தரத் தமிழில் இறைவனைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பதிகம், பாசுரம், பாமாலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இவைகளுக்குள் பொருள் வேறுபாடு என்ன என்பதை தமிழ் அறிஞர்கள் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம். இருந்தாலும், பொதுவாக இறைவனைப் பற்றிய பாடல்களை, பொருளடக்கத்துக்கு ஏற்ப, சம்பவத்துக்கு ஏற்ப, பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டது பதிகம் எனப்படுகிறது. பண் என்றால் பாடுவதற்கு உகந்தது. அப்படிப்பட்ட பத்துப் பாடல்களில் தொகுப்பே பதிகம். இதைப்போலவே பத்துப் பாடல்களாக பாடப்படுவதை தமிழ் புலவர்கள் பதிகம் என்று வகுத்துத் தந்துள்ளார்கள். அப்பர், சுந்தரர் முதலானவர்கள் சிவனின் அருமை பெருமைகளையும் சிவனெறியையும் உணர்த்தி பாடிய தேவாரப் பாடல்கள் பதிக வகையைச் சேர்ந்தவை. ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் ஒரு பாட்டு பலனைச் சொல்லும் என்பதால் தேவாரத்தில் மட்டும் பதிகம் பத்துக்கு பதில் பதினோரு பாடல்களாக இருக்கும் வடமொழியில் இந்தப் பதிகமே தசகம் என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
ஸ்ரீபாகவதத்திலுள்ள கிருஷ்ணாவதார சரித்ரத்தை தசகம் தசகமாக - பத்துப் பத்து பாட்டுகளாக - தசகம் என்னும் பெயரில் ஸ்ரீகுருவாயூரப்பன் சன்னிதியில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் நாராயணீயம் என்னும் புஸ்தகமாக எழுதி அரங்கேற்றியுள்ளார். இறைவனைப் பற்றிய பெருமைகளை பாட்டிசைத்து இசை வடிவில் இறைவனுக்கு மாலையாகச் சூட்டுதல் என்னும் பாவத்தில் பாடப்படும் பாடல்கள் பாமாலை எனப்படுகிறது. பா+மாலை பாட்டுக்களால் அமைந்த மாலை பாமாலை எனப்படுகிறது. ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரைப் பற்றி இயற்றி பாடிய திருப்பாவை பாமாலை வகையை சேர்ந்தது. ஆண்டாள் இவ்வாறு திருப்பாவையை இயற்றி பாமாலையாக சூட்டி இறையருள் பெற்றாள். பாசுரம் என்பது செய்யுள், பாடல் ஆகிய இரண்டையும் குறிக்கும் பொதுவான சொல். இதையே ஆங்கிலத்தில் கவிதை (போயம்) என்கிறார்கள். பொதுவாக, வைஷ்ணவர்கள் இறைவனைப் பற்றிய பாடல்களை பாசுரம் என்று அழைப்பார்கள். பா (பாட்டு) என்னும் சொல், பதிகம், பாமாலை, பாசுரம் ஆகிய மூன்றிலுமே உள்ளது. ஆகவே, இறைவனைப் பற்றிய பாடல்கள் என்பதே இந்த மூன்று சொற்களுக்குமான பொதுவான பொருள்.