பதிவு செய்த நாள்
07
ஜூலை
2017
01:07
மாமல்லபுரம் : மாமல்லபுரம், மல்லிகேஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. மாமல்லபுரத்தில், மல்லிகேஸ்வரி அம்பிகை உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 14 ஆண்டுகள் கடந்த நிலையில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது, முதன்முதலாக கொடிமரம் அமைக்கப்பட்டது. சந்திரசேகர், அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர்களுக்கு, உலோக சிலைகளும் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து, 4ல், முதல்கால யாகசாலை, கோபூஜை, உற்சவர்கள் வாஸ்துசாந்தி; நேற்று முன்தினம், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை உள்ளிட்ட வழிபாடு ஆகியவை நடந்தன. நேற்று காலை, நான்காம்கால யாகசாலை வழிபாடு முடிந்தது. இதையடுத்து, சன்னதிகளின் விமானங்களுக்கு கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, 9:25 மணிக்கு, புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை, 11:30 மணிக்கு, சுவாமிக்கு மகா தீபாராதனை; மாலை, திருக்கல்யாணம்; இரவு வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.