அமர்நாத் யாத்திரை: 1.15 லட்சம் பக்தர்கள் பனிலிங்கம் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2017 11:07
ஜம்மு:அமர்நாத் புனித யாத்திரையில் இதுவரை 1.15 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். தெற்கு காஷ்மீரில் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் புனித குகைக் கோயில் உள்ளது. 40 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடையும். இதுவரை 8 குழுக்கள் பனி லிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுச் சென்றுள்ளன. இதில் தற்போது வரை 1.15 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். 9-வது நாளான நேற்று ஒரே நாளில் 10,461 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 1,15,841 பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.